Last Updated : 16 Jun, 2023 02:31 PM

 

Published : 16 Jun 2023 02:31 PM
Last Updated : 16 Jun 2023 02:31 PM

ரூ.8.22 கோடியில் சுற்றுலா தலமாகும் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை, தலையூத்து அருவி - சிறப்புகள் என்னென்ன?

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மற்றும் விருப்பாச்சி தலையூத்து அருவியை சுற்றுலாக் தலங்களாக்க ரூ.8.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஒட்டன்சத்திரம் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு அருகே பரப்பலாறு அணை உள்ளது. பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சங்கமிக்கும் இடம் தான் இந்த அணை. தமுக்குப்பாறை, தட்டப்பாறை எனும் பிரம்மாண்டமான பாறைகளுக்கு நடுவே பள்ளத்தை நோக்கி பாய்கிறது பரப்பலாறு. அந்த இரண்டு பாறைகளையும் இணைத்து கடந்த 1975-ம் ஆண்டு 90 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.

அணை நிரம்பினால் நங்காஞ்சியாறு வழியாக சத்திரப்பட்டி, முத்துபூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் சென்ற பின் இறுதியாக இடையகோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு செல்கிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகளின் தாகம் தணிப்பதாகவும் அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் அருந்த வருவதை பார்க்க முடியும். அணைக்கு செல்லும் வழி முழுவதும் இயற்கை வளம் நிறைந்து கிடக்கிறது. தொலைபேசி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அணையின் நிலையை அதிகாரிகளுக்கு தெரிவிக்க பயன்படுத்திய ‘வாக்கி டாக்கி’ சாதனங்களுக்கான டவர் இன்னும் அணைப்பகுதியில் உள்ளது.

விருப்பாச்சி தலையூத்து அருவி: பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் மேல் தலையூத்து அருவி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ. தூரம் பயணித்தால் அருவியை அடையலாம். இந்த அருவி மூலிகை செடிகளின் மீது பட்டு வருவதால் குளிப்போருக்கு புத்துணர்ச்சி தருகிறது. ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது சிறப்பு.

மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும் தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்கின்றனர். இந்த நீரை காசி தீர்த்தத்திற்கு ஈடாக கருதுவதால் ‘நல்காசி’ என்றும் அழைக்கின்றனர். பின் மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ., தொலைவுக்கு நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அருவி பகுதியில் நீர்ச்சுழல், சில இடத்தில் ஆழம் அதிகம் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக எவரும் குளிப்பதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் உள்ளூர் வாசிகளும், அருவி பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்வோரும் அவ்வப்போது ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இயற்கை வளம் நிறைந்து கிடக்கும் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதனை நிறைவேற்றும் வகையில், பரப்பலாறு அணை மற்றும் விருப்பாச்சி தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க முதல் கட்டமாக, ரூ.4.11 கோடி, 2-ம் கட்டமாக ரூ.2.90 கோடி, 3-ம் கட்டமாக ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.8.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 3 ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஒட்டன்சத்திரம் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x