Published : 16 Jun 2023 04:13 AM
Last Updated : 16 Jun 2023 04:13 AM
மதுரை: ரயில்வே சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 1-ல் பயணம் தொடங்குகிறது.
ஐஆர்சிடிசி-யின் பொது மேலாளர் கே. ரவிக்குமார், மதுரை வட்டார மேலாளர் பாஷ்சித் அகமது ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐஆர்சிடிசி சுற்றுலாப் பயணிகளுக்கென பிரத்யேகமாக ‘ பாரத் கவுரவ் ’ என்ற சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 ஸ்லீப்பர் கோச், 1 பேன்டரி கார், 2 பவர் கார்கள் என 14 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.
எங்களது பிரிவின் தென்மண்டலம் சார்பில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை’ என்ற பெயரில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி இப் பயணம் கொச்சுவேலியில் இருந்து தொடங்குகிறது. 12 நாட்கள், 11 இரவுகள். நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை வழியாகச் செல்கிறது.
இதில் குறிப்பாக ஐதராபாத், மதுரை , ஆக்ரா, டெல்லி, அமிர்தசரஸ், வைஷ்ணவி தேவி (கட்ரா) ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலாப் பகுதிகள் பார்வையிடும் இடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்க தலா ஒருவருக்கு ரூ. 22, 350-மும், குளிர்சாதனப் பெட்டியில் பயணிக்க ரூ. 40,380 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரைப் பார்வையிடுவதற்கு போக்குவரத்து வசதி, பயணத்தின்போது தென்னிந்திய சைவ உணவு, பயணக் காப்புறுதி போன்ற வசதிகளும் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எல்டிசி சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயணத்துக்கு ஆன்லைன் மூலமும், மதுரை ஐஆர்சிடிசி-யிலும் முன்பதிவு செய்யலாம்.
மேலும், விவரமறிய 82879 32122 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏற்கெனவே இந்த ரயில், முதல் சுற்றுலாவை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் 580 பேர் பயணித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT