Published : 15 Jun 2023 06:19 PM
Last Updated : 15 Jun 2023 06:19 PM
திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் குடியிருப்பு வளாகமான கைலாசபுரத்தில் உள்ள புத்தாயிரம் பூங்காவை முறையாக பராமரித்து, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என பெல் ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவெறும்பூரில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்தில்(பெல்) பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கான குடியிருப்புப் பகுதி உள்ள கைலாசபுரத்தில், மான் பார்க் என்றழைக்கப்படும் புத்தாயிரம் பூங்கா உள்ளது. இங்கு ஊஞ்சல், சறுக்குமரம், நீரூற்று, விளையாட்டு ரயில் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
மேலும், இங்கு நூற்றுக்கணக்கான புள்ளிமான்களும் உள்ளதால், குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடன் பூங்காவுக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்களுக்காக, வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரையும் பூங்கா திறக்கப்படுகிறது.
பெல் ஊழியர்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் தங்களது குழந்தைகளுடன் இங்கு வந்து பொழுதுபோக்கிச் செல்வது வழக்கம். இந்தப் பூங்காவுக்கு வார நாட்களில் குறைந்தபட்சம் 100 பேரும், வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 500-க்கும் அதிகமானோரும் வந்து செல்கின்றனர்.
நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 மற்றும் விளையாட்டு ரயிலில் பயணிக்க ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பூங்கா முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுகள் உரிய பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்தும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சரவணன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்தப் பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பூங்காவில் உள்ள நீரூற்றுகள் செயல்படாமல் உள்ளன. பல விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால், குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இங்குள்ள கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லை.
பூங்காவின் பெரும்பகுதி புதர்மண்டிக் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருக்குமோ என்று மக்கள் அச்சமடைகின்றனர். மான்கள் உள்ள பகுதியையொட்டிய இடங்களில் முறையாக கழிவுகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பூங்கா மற்றும் பூங்காவை ஒட்டிய பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. பெல் நிர்வாகம் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை மாற்றுவது உட்பட பூங்காவை முழுமையாகச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT