Published : 12 Jun 2023 04:02 PM
Last Updated : 12 Jun 2023 04:02 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவை போல் கடற்கரையை ஒட்டி பொழிமுகம், கால்வாய், நீர்நிலைகள், அணைக்கட்டுகள் நிறைந்துள்ளன. ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலா பயணிகள் வரை குமரி மாவட்டத்துக்கு வந்து செல்லும் நிலையில் சுற்றுலாவை உரிய முறையில் மேம்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி யில் கடந்த இரண்டரை வருடமாக கிடப்பில் போடப்பட்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு சொகுசு படகுகள் மூலம் கடந்த மாதத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு ஒன்றரை மணி நேரம் உல்லாச படகு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்த கட்டமாக குமரி மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளை சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி அருகே கடலும், ஆறும் சந்திக்கும் மணக்குடி பொழிமுகம் கால்வாயில் இயற்கை எழிலுடன் கூடிய அலையாத்தி காடுகளும், ரம்யமான சூழலும் நிலவுகிறது.
கேரளாவில் உள்ள பூவாறு பொழிமுகப்பகுதி போல் இருப்பதால் இங்கு சுற்றுலா படகு சவாரி தொடங்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட மணவாளபுரம் வழியாக மணக்குடி கடற்கரைக்கு சென்றடையும் வண்ணம் பழையாறு பொழிமுகம் கால்வாயில் படகுசவாரி மேற்கொள்வது குறித்த ஒத்திகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், குமரி மாவட்ட ஆட்சியர் தர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ‘படகு பயணத்தின்போது இயற்கையை ரசிக்க முடிந்ததோடு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அலையா த்திகாடுகளை காண முடிந்தது. இக்காடுகள் வெள்ளப்பேரிடர்களை தடுக்கும் அரணாக திகழ்கிறது. ராம்சார் குறியீட்டில் இப்பகுதி ஈர நிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குட்டி பூவாறு: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் இங்கு வந்து, தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கு இந்தப் பொழிமுகம் உதவி புரிகிறது. குமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் குட்டி பூவாறான மணக்குடி பொழிமுகம் கால்வாயி்ல விரைவில் சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட உள்ளது’ என சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment