Last Updated : 12 Jun, 2023 03:28 PM

 

Published : 12 Jun 2023 03:28 PM
Last Updated : 12 Jun 2023 03:28 PM

அடிப்படை வசதிகள் இல்லாத தனுஷ்கோடி, அரிச்சல்முனை புதுபொலிவு பெறுமா?

ராமநாதபுரம்: தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் குடிநீர், கழிப்பறை வசதிகளையாவது செய்துதர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராமேசுவரம் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இப்பகுதி ஒருபுறம் இந்தியப் பெருங்கடலும் மறுபுறம் வங்காள விரிகுடாவும் சூழ்ந்த பரபரப்பான துறைமுக நகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இங்கு ஏராளமான மக்கள் வசித்தனர். வீடுகள், பள்ளிகள், தேவாலயம், கோயில், அஞ்சல் அலுவலகம், ரயில் நிலையம் மற்றும் துறைமுகம் இருந்தன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் இருந்துள்ளது.

1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடியின் பெரும்பாலான பகுதிகள் கடலில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அங்கிருந்த சாலை மற்றும் ரயில் தண்டவாளங்கள் கடலில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டது. அப்பகுதியை மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதியாக அரசு அறிவித்தது.

எஞ்சியுள்ள தற்போதைய தனுஷ்கோடி பகுதியில் சேதமடைந்த ரயில் நிலையம், தேவாலயம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை காண அதிக அளவில் மக்கள் வரத் தொடங்கியதால் சுற்றுலா மையமாக மாறியது. ஆனாலும், கடந்த 58 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும், சுற்றுலா மேம்பாட்டுப் பணியும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

ராமேசுவரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரைதான் முறையான சாலை வசதி இருந்தது. சொந்த வாகனங்களில் வரும் பயணிகள் எளிதாக தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்குச் செல்ல முடியவில்லை. 2017-ம் ஆண்டில்தான் மத்திய அரசால் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனை வரை 9.5 கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.

விடுமுறை காலங்களில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனையில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, வாகன நிறுத்தம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த திருச்சியைச் சேர்ந்த சிவா கூறுகையில், கோடை விடுமுறைக்காக இங்கு குடும்பத்துடன் வந்தோம். இங்கு கழிப்பறை, குடிநீர் வசதியில்லாமல் பெரிதும் சிரமப்பட்டோம். ஆண்கள் திறந்த வெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பெண்களின் நிலை மிகவும் கஷ்டமாக உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்றார்.

ரூ.5 கோடி ஒதுக்கீடு: இது குறித்து ராமேசுவரம் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) அருண்பிரசாத் கூறியதாவது: தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்குள்ள அழிந்த நகரத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட கடற்கரை மணலில் நடந்து செல்வதில் சிரமம் உள்ளது.

அதற்காக மரப்பாதைகள் அமைக்கவும், கழிப்பறைகள், குடிநீர், வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் முதல் கட்டமாக ரூ.5 கோடியை சுற்றுலாத் துறை ஒதுக்கி உள்ளது. நகராட்சி சார்பில் ரூ.1.25 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

வனத்துறை சோதனைச் சாவடியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மின்சார வாகனங்களில் அரிச்சல்முனை வரை அழைத்துச் செல்ல வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x