Published : 10 Jun 2023 06:52 AM
Last Updated : 10 Jun 2023 06:52 AM
உதகை: உதகை பழைய நீதிமன்ற கட்டிடத்தில் நீதித்துறை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டம் மற்றும் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் இயங்கி வந்தது. இந்நிலையில், ஃபிங்கர்போஸ்ட் அருகே காக்காதோப்பு பகுதியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. இதனால், கடந்த ஜனவரி 27-ம் தேதி மாவட்ட நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் காக்காதோப்பில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டன.
உதகை நகரின் மையப் பகுதியில், ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. இது, ஆங்கிலேயர் கட்டிடக் கலையில் மிகவும் அழகான வடிவில் புராதன சின்னமாக விளங்கி வருகிறது. புராதன கலாச்சாரம் மிகுந்த பழைய நீதிமன்ற கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பாலயம் எஸ்.கே.செல்வராஜ் கூறியதாவது: புதிய நீதிமன்ற கட்டிடத்தில் வழக்குகளை நடத்த தொடங்கிவிட்டதால், பழைய நீதிமன்றம் காலியாக உள்ளது. 1857-ம் ஆண்டுக்கும் முன்பு கட்டப்பட்ட புராதன சின்னமான இக்கட்டிடத்தை, அரசு புராதன சின்னமாக அங்கீகரித்துள்ளது.
ஆங்கிலேய கட்டடிடக் கலையில் அமைக்கப்பட்டது மட்டுமின்றி, அதன் அறையிலுள்ள பொருட்களும் மிகவும் பிரசித்திபெற்றவை. குறிப்பாக மாவட்ட நீதிபதியின் இருக்கை உயர் நீதிமன்றத்தில்கூட இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வழக்கறிஞர்களின் இருக்கைகள், பார்வையாளர்கள் மாட இருக்கைகள் மிகவும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளன.
அறைகலன்கள் இன்றளவும் மிகவும் கண்கவர் வடிவில் உறுதியான அழகான வடிவமைப்பில் உள்ளன. இந்த கட்டிடத்திலுள்ள கடிகார கோபுரமும் பிரசித்தி பெற்றது. இதுபோன்று உதகை அரசுக் கலை கல்லூரியில் மட்டும் ஒன்று உள்ளது. எனவே, இவையும் பாதுகாக்கப்பட வேண்டியவை. உதகையில் தான் இந்திய தண்டனை சட்டம் உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னா போன்றோர் இந்த நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். இங்கு பணியாற்றிய நீதிபதிகள் பலர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என்று பதவி உயர்வு பெற்றுச் சென்றது தனிச்சிறப்பாகும். மேலும், இங்கு வழக்கு நடத்திய வழக்கறிஞர்கள் பலரும் பின்னர் நீதி அரசர்களாக பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேய கட்டிடக் கலையில் உருவான இக்கட்டிடம், நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்தும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பது ஆச்சர்யம். மேலும், அதன் கடிகார கோபுரம் இன்றளவும் சிறப்புமிக்கதாக உள்ளது. நாட்டிலேயே பழமைவாய்ந்த கோபுரமாக திகழ்கிறது. இக்கட்டிடம் காலியாக உள்ளதாலும், எந்த அலுவலும் நடைபெறாததாலும் பராமரிப்பின்றி சிதிலமடையும் நிலையில் உள்ளது.
நீலகிரியில் நீதித்துறை அருங்காட்சியகம் இல்லை என்ற குறை நீங்க, உலக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இங்கு, நீதித்துறை அருங்காட்சியகம் அமைப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த வளாகத்தை அப்படியே விட்டால் சிதிலமடைந்து வீணாகிவிடும். பாரம்பரிய சின்னமான இக்கட்டிடத்தை இடிக்க அனுமதி வழங்கக்கூடாது. நீதித்துறை சார்ந்த பழமைமிகு பொருட்கள், சட்ட நூல்களை காட்சிப்படுத்த வேண்டும்.
கட்டிடத்திலுள்ள பழங்கால சிறப்பு வாய்ந்த நீதிமன்ற அமைப்பை பராமரித்து, அவ்வப்போது பயிற்சி நீதிமன்றம் நடத்த வேண்டும். அதற்கு ஏதுவாக, இந்த வளாகத்தில் அதன் தொன்மையை பறைசாற்றும் விதமாக, நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT