Published : 06 Jun 2023 06:33 AM
Last Updated : 06 Jun 2023 06:33 AM

சுற்றுலா நகரமான உதகையில் பராமரிப்பில்லாத நம்ம டாய்லெட்

உதகை: சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும், நகரத்திலும் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில், உதகை நகராட்சி பின்தங்கியுள்ளது. பல வார்டுகளில் குடிநீர், சுகாதார பிரச்சினை இருந்து வருகிறது.

வார்டுகளில் தேங்கியுள்ளகுப்பை அகற்றப்படாததால், காற்றில் பறந்து தெரு முழுவதும்சிதறிக்கிடக்கின்றன. குப்பைத்தொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதால், அப்பகுதியிலேயே பொதுமக்கள் குப்பைகொட்டுகின்றனர்.

உணவு தேடி கால்நடைகள்அப்பகுதியை முற்றுகையிடுவதால், சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. குப்பைத் தொட்டிகள் இல்லாத நிலையில், பலர் குப்பையை பைகளில் அடைத்து அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி மற்றும் வனத்தில் வீசி செல்கின்றனர். கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

உதகை ஏ.டி.சி. அருகில் மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் சாலை, ஹெச்.ஏ.டி.பி. அரங்கம் செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, உதகை மகப்பேறு மருத்துவமனை, மார்க்கெட் மற்றும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள மறைவிடங்கள் உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ‘நம்ம டாய்லெட்’ திட்டம் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "நகரில் நீண்டகாலமாக இருந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நம்ம டாய்லெட்' என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மூலமாக, மேற்கத்திய பாணியில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்துவதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டனர்.

மேலும், இந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பயனற்று கிடக்கின்றன. இதனால்,கழிப்பிட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நகரில் பயனற்று காணப்படும் கழிப்பிடங்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்றனர்.

நகராட்சி துணைத் தலைவர் ஜே.ரவிகுமார் கூறும்போது, "உதகை நகரிலுள்ள பயனற்ற கழிப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுகாதார வளாகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x