Published : 05 Jun 2023 09:50 AM
Last Updated : 05 Jun 2023 09:50 AM

கோடை சீசன் நிறைவடைந்த பின்னரும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை: கோடை சீசன் நிறைவடைந்த பின்னரும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, உதகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த 31-ம் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருகின்றனர். தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று திரண்டிருந்த சுற்றுலா பயணிகள். படம்: ஆர்.டி.சிவசங்கர்

அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும், புல்வெளி மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர். உதகை படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

காட்சி மாடத்தில் நின்ற படி உதகை ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதேபோல, உதகை ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலைச் சிகரம், சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதையடுத்து,நெரிசலை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தினர். லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையப் பகுதியில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர். இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x