Published : 03 Jun 2023 06:36 AM
Last Updated : 03 Jun 2023 06:36 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை அமைந்துள்ள கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பைத் தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள, ஓசோன் காற்று அதிகளவில் வீசக்கூடிய தரங்கம்பாடி கடற்கரைக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மிக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் டேனிஷ் கோட்டை தடுப்புச்சுவர் அருகிலும், கோட்டையின் எதிர்புறத்தில் மக்கள் அமர்ந்து கடலை ரசிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ள இடத்திலும் மண் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தரங்கம்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் கூறியது: டேனிஷ் கோட்டையின் சுற்றுச் சுவரை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை தொடும் அளவுக்கு கடல் அலைகள் வந்து, அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சுற்றுச் சுவரையொட்டி அவ்வப்போது கடல் நீர் தேங்குகிறது.
கோட்டையின் எதிர்புறம், கடற்கரையையொட்டி மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை தொட்டு விடும் அளவுக்கு அலைகள் வந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மிக சமீப காலத்தில்தான் இந்த இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மண் அரிப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
தரங்கம்பாடி சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.7 கோடி செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. எனினும், கருங்கற்களால் ஆன அலைத் தடுப்பு சுவர் அமைத்து புகழ் வாய்ந்த பழமையான வரலாற்று சிறப்புமிக்க டேனிஸ் கோட்டையை சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT