Published : 02 Jun 2023 07:31 PM
Last Updated : 02 Jun 2023 07:31 PM

சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 6 வரை மலர்க் கண்காட்சி - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை செம்மொழி பூங்காவில் சனிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மலர்க் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 15.88 லட்சம் ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும், இத்துறையின் கட்டுப்பாட்டில் 79 அரசு தோட்டக்கலை பண்னைகளும் 24 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களிலுள்ள பூங்காக்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. மேலும், குற்றாலத்தில் சாரல் விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா போன்ற கண்காட்சிகள் பிற மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, சென்னை, கலைவானர் அரங்கில் நடத்தப்பட்ட முதலாவது மலர் காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இவ்வாண்டு செம்மொழி பூங்காவில் 3.6.2023 முதல் 5.6.2023 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இம்மலர்காட்சியில், தமிழகத்தில் பயிரிடப்படும் பல வண்ண கொய்மலர்களையும், பாரம்பரிய மலர்களையும் கொண்டு பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மலர்காட்சியில் இரண்டரை லட்சம் கொய்மலர்களும், 250 கிலோ உதிரிபூக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் மலர்கள் கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமாரி, கொடைக்கானல், போன்ற இடங்களிலிருந்து வருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் நடைபெற இருக்கும் 2வது மலர் கண்காட்சியை காலை 9 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இம்மலர் காட்சியினை பார்வையிட விரும்புவோர் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் நுழைவு சீட்டினை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க, இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து, மலர்காட்சியை காண வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறது. பார்வையாளர்களின் வாகனம் நிறுத்த அருகில் உள்ள சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இக்கோடை காலத்தில் நடைபெறும் 2வது மலர்க்காட்சியினை அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் கண்டு களித்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x