Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. கட்சியினரிடம் விருப்ப மனு பெறுதல், வேட்பாளர் தேர்வு என்று அதற்கான பணிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடக்க உள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச. 18-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பல மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இந்தப் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தவே திமுக விரும்புகிறது. நேரடி தேர்தல் நடத்தினால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முக்கியமான மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கேட்கும் வாய்ப்புள்ளதால் திமுக அதைவிரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை எப்படி ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கேட்கவிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வெற்றி வாய்ப்புள்ள பெண் வேட்பாளர்களையும், பட்டியலின, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் பொருத்தமான வேட்பாளர்களையும் தேர்வு செய்வது, மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நிறுத்துவது உள்ளிட்ட அம்சங் கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT