Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

விமானப்படையின் கட்டுப்பாட்டில் நஞ்சப்ப சத்திரம் : வீடியோ எடுத்தவரின் செல்போன் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர்.

குன்னூர்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியை விமானப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். விபத்தை கடைசியாக வீடியோ எடுத்தவரின் செல்போன், தடயவியல் துறையினரின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து, முப்படைகளின் வீரர்களும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரிப்பாகங்களை சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மரங்களை வெட்டி உதவி செய்கின்றனர். சேகரித்த உதிரிப்பாகங்களை பாதுகாப்புடன் உடைக்க வெல்டிங் இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன.

ராணுவ வீரர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. பிஸ்டல் மற்றும் அதனை லோடு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களை விமானப்படையினர் சேகரித்தனர். எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் துப்பாக்கிகள் எரிந்த நிலையில் இருந்தன.

ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஸ்வர் சிங், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாவட்ட உதவி தீயணைப்பு துறை அலுவலர் நாகராஜன், குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீ காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து கேட்டறிந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி இருந்ததா? அவை சேதமாகி உள்ளதா? என்பது குறித்து அறிய மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி இருந்தது என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கும் விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.

வீடியோ பதிவு

ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த கோவையைச் சேர்ந்த நாசரின் செல்போனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மை தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் வருவாய் துறையினர், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றபோது கிராமங்களில் எத்தனை நபர்கள் இருந்தனர்? அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x