Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

மாணவரின் உடலை வாங்க மறுத்து - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 10 பேர் உட்பட பலர் மீது வழக்கு :

ராமநாதபுரம்

மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 10 பேர் உட்பட பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் (21) போலீஸ் விசாரணைக்குப் பின் மர்மமான முறையில் இறந்தார். இவரது உடல் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி கடந்த 8-ம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. மறு உடற்கூராய்வுக்குப்பின் உறவினர்கள் உடலைப் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதில் சாதி, மத, அரசியல், சாதிய அமைப்புகள் தலையீடு, போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மறு உடற்கூராய்வு முடிந்த பின்னரும் நீதி கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் என மணிகண்டனின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அதன்பின் வருவாய், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.மடை கிராம நிர்வாக அலுவலர் ஜெயமதி புகாரின் பேரில் ராமநாதபுரம் நகர் போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆட்சியரின் 144 தடையுத்தரவை மீறிச் செயல்பட்டதாக பாஜக மாநில மருத்துவர் அணிச் செயலாளரான முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரைச் சேர்ந்த டாக்டர் ராம்குமார், பாஜக மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், மாநில இளைஞரணிச் செயலாளர் ஆத்ம கார்த்திக், முக்குலத்தோர் எழுச்சிக் கழகத் தலைவர் கவிக்குமார், நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகி சுமன், ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனியசாமி, முக்குலத்தோர் புலிப்படை மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம், மூவேந்தர் முன்னேற்றக்கழக மாநில துணைச் செயலாளர் செந்தூர் பாண்டியன், மருது தேசியக்கழக மாநில தலைவர் மருதுபாண்டியன், தென் இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்டச் செயலாளர் கர்ணன் ஆகிய 10 பேர் மற்றும் பலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

மறு உடற்கூராய்வு முடிந்த பின்னரும் மணிகண்டனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். வருவாய், காவல் அதிகாரிகள் பேச்சுக்குப் பிறகு உடலைப் பெற்றுச் சென்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x