Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM
நர்ஸிங் கல்லூரி தாளாளர் மீதானபாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபி சைலேந்திரபாபு விடம் நேற்று ஒரு புகார் மனுகொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் நர்ஸிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டு, வேலூர் சிறையில்அடைக்கப்பட்டார். இந்நிலையில்,கைதாகி ஒரு வாரத்துக்குள்ளாகவே திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஜோதி முருகன், இவ்வளவு சுலபமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க பெண்கள் கடந்த 6-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சமயம் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் வழக்கறிஞர் பிரிவு தலைவர் தெய்வேந்திரன் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து, அதில் பங்கேற்ற பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தபுகாருக்கு வெறும் ரசீது மட்டுமேஅளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாதர் சங்க பெண்கள் குறித்து,நடக்காததை எல்லாம் ஜோடித்துதெய்வேந்திரன் கொடுத்த பொய்யான புகார் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் மாதர் சங்க பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாருக்கு உள்ளான நபருக்கு ஆதரவாக ஒரு தனிநபர் கொடுத்த பொய்யான புகார் மீது வழக்கு பதிவு செய்த தாடிக்கொம்பு காவல் துறையின் நடவடிக்கை நியாயமற்றது.
எனவே, ஜோதிமுருகன் சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்.
திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பொய்யாகப் புனையப்பட்ட புகாரின் அடிப்படையில் கே.பாலபாரதி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடன் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT