Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

தமிழக காவல் துறை டிஜிபி கட்டுப்பாட்டில் இயங்கவில்லை : பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை

தமிழக காவல் துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்று பாஜக மாநில தலைவர்அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது தவறு இல்லை. ஆளுநர் ஏற்கெனவே திட்டமிட்டபடி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால், விபத்தில் பலியான வீரர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே மரியாதை செலுத்தினார்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு தொடர்பாக வாட்ஸ்அப்பில் தவறாக கருத்துகளை தெரிவித்த திமுகவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர் குறித்து தகவல்கள் உள்ளது.

தி.க. அல்லது திமுக அவதூறு பரப்பினால் காவல் துறை தன் கண்களை மூடிக்கொள்கிறது. தேசியவாதி ஒருவர் கருத்து சுதந்திரத்துக்கு அருகில் இருக்கக் கூடிய கருத்தை சொல்லும் போது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது.

மாரிதாஸ் வெளியிட்ட கருத்தில் என்ன தவறு இருக்கிறது. அதை விட மோசமான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன.

தமிழகத்தில் காவல் துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக காவல் துறை டிஜிபி கையில் இருந்து நழுவி விட்டது.

தமிழகத்தில் காவல் துறையை திமுக மாவட்டச் செயலாளர்கள் தான் நடத்தி வருகின்றனர். காவல் துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.

ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து தவறான கருத்துகளை தெரிவித்தவர்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுமையை சோதிக்காதீர்கள்

சிஆர்பிசி சட்டம் இந்தியா முழுவதும் உள்ளது. தமிழகத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்குறித்து தவறான கருத்து வெளியிட்டது குறித்து எந்த மாநிலத்தில் உள்ள காவல் துறையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. எனவே, பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.

17 மாநிலத்தில் நாங்கள் ஆட்சியில் உள்ளோம். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிஆர்பிசி சட்டம் இந்தியா முழுவதும் உள்ளது. தமிழகத்தில் பிபின் ராவத் மரணம் குறித்து தவறான கருத்து வெளியிட்டது குறித்து எந்த மாநிலத்தில் உள்ள காவல் துறையும் நடவடிக்கை எடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x