Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு, ஹெலிகாப்டர் பாகங்கள், தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையிலான விமானப்படை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உள்ள பொருட்களை சேகரித்து பதிவு செய்யும் பணி நேற்று நடந்தது.
தனியார் எஸ்டேட், ஹெலிகாப்டர் விழுந்த இடம், சாலை பகுதி, தாழ்வாக உள்ள இடம், வனப்பகுதி குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டு, வருவாய் துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு விமானப்படை விசாரணை குழுவினருக்கு விளக்கமளித்தனர். மேலும், ட்ரோன் இயக்கப்பட்டு வேறு இடங்களில் ஹெலிகாப்டர் பாகங்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2-வது நாளாக அப்பகுதியில் ஆய்வு நடந்தது.
விமானப்படை குழுவினர், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
ட்ரோன் மூலமாக ஆய்வு செய்ததில், ஹெலிகாப்டர் பாகங்கள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. அதனை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரைபடம் மூலமாக நடந்த ஆய்வின் அடிப்படையிலும், ஹெலிகாப்டர் பயணித்த வழித்தடம், அந்த பகுதியில் ஹெலிகாப்டர் பாகங்கள், தடயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் கணக்கெடுப்பையும் நடத்தினர். பனி மூட்டம் காரணமாக முறையாக வீடியோ பதிவு மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
5 கி.மீ. தூரம் வீடியோ பதிவு
விபத்து நிகழ்ந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹெலிகாப்டர் வந்த திசை, எதிர்திசை என நான்கு புறங்களிலும் இரண்டு ட்ரோன்களை கொண்டு வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது.இந்த வீடியோ பதிவை முப்பரிமாணமாக மாற்றி ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளவும் விமானப்படையினர் திட்டமிட்டு உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT