Last Updated : 12 Dec, 2021 03:09 AM

 

Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

விமானப் படை வீரரின் உடல் திருச்சூர் எடுத்துச் செல்லப்பட்டது :

பிரதீப் ஆரக்கல்

கோவை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, விமானப்படை வீரரின் உடல், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சாலை வழியாக கேரள மாநிலம் திருச்சூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தூரைச் சேர்ந்தவர் பிரதீப் ஆரக்கல்(37). இவர், சூலூர் விமானப் படைத்தளத்தில் ஜூனியர் வாரண்ட் ஆபிசராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ம் தேதி குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் இவரும் ஒருவர். 13 பேரின் உடல்களும் கடந்த 9-ம் தேதி சூலூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி கன்டோன்மென்ட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முடிந்த பிறகு, உடல்கள், அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, பிரதீப் ஆரக்கல் உடல், விமானம் மூலம் நேற்று காலை சூலூர் விமானப் படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில், சூலூர் விமானப்படையினர் உடலை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, சூலூர் விமானப் படைத்தளத்தில், பிரதீப் ஆரக்கல்லின் உடலுக்கு, மத்திய இணையமைச்சர் முரளீதரன், திருச்சூர் எம்.பி பிரதாபன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மற்றும் விமானப் படை அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அமரர் ஊர்தி வாகனம் மூலம், பிரதீப் ஆரக்கல்லின் உடல் சாலை மார்க்கமாக, சூலூர் சாலை, கொச்சின் பைபாஸ் சாலை, பாலக்காடு சாலை, வாளையாறு வழியாக திருச்சூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விமானப் படைத்தளத்தில் இருந்து வெளியே அவரது உடலை கொண்டு வரும் போது, வாசலில் திரண்டு இருந்த பொதுமக்கள், வாகனத்தின் மீது மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தமிழக - கேரள எல்லையான, வாளையாறு சோதனைச் சாவடி அருகே, கேரள மாநில அரசின் அமைச்சர்கள் கே.ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியர்கள் ஹரிதா குமார்(திருச்சூர்), முரன்ஜோதி (பாலக்காடு) ஆகியோர் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதீப் ஆரக்கல்லின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களும் திருச்சூர் சென்றனர்.

பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர்

விமானப்படையில், ஜூனியர் வாரண்ட் ஆபிசராக பணியாற்றி வந்த பிரதீப் ஆரக்கல்லுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 2004-ல் விமானப்படையில் சேர்ந்த இவர், காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் புணிபுரிந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்னர், சூலூருக்கு பணியிடம் மாற்றப்பட்டார். முப்படை தலைமை தளபதியுடனான குன்னூர் பயணத்துக்கு அவர் தேர்வாகி இருந்தார். இதுகுறித்த தகவலை அவரது பெற்றோரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்து இருந்தார். இவரது தந்தை ராதாகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x