Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை பெரியார், திருநெல்வேலி எம்ஜிஆர் பேருந்து நிலையங்கள் உட்பட ரூ.533.35 கோடி மதிப்பிலான கட்டிடங்களைத் திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 1,037 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் ரூ.55 கோடி மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையம் அருகில் ரூ.2.75 கோடியில் கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூலவீதியில் ரூ.2.45 கோடியில் புராதான அங்காடிகள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர, திருச்சி மாநகராட்சியில் உய்யகொண்டான் ஆற்றின் முகப்பு ரூ.18.32 கோடியில் மேம்படுத்தப்பபட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.15.49 கோடியில் பழைய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. திருவையாறு பேருந்து நிலையத்தில் ரூ.14.44 கோடியில் வணிகவளாகம், திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.13.20 கோடியில் மேம்படுத்தப்பட்ட எம்ஜிஆர்பேருந்து நிலையம் அமைக்கப்பட் டுள்ளன.
வேலூர் மாநகராட்சியில் ரூ.13.24கோடியில் அமைக்கப்பட்டுள்ள சூரியமின் சக்தி நிலையம், வணிகவளாகம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு, நவீன எரிவாயு தகன மேடை, தேனி மாவட்டம் சின்னமனூரில் பணியாளர் குடியிருப்பு, போடியில்பொதுசுகாதார வார்டு அலுவலகம், திருவண்ணாமலையில் தங்கும் விடுதி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், குளித்தலை நகராட்சியில் சிறப்பு தங்குமிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இதேபோல, பேரூராட்சி ஆணையகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் என மொத்தம் ரூ.533.35 கோடி மதிப்பிலான 44 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்துவைத்தார்.
மேலும், கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய முன்களப் பணியாளர்கள் ஜி.கணேசன், எம்.பாலாஜி ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
பணியின்போது உயிரிழந்த 37 பேரூராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் வகையில், 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதுதவிர, மாநகராட்சி, நகராட்சிகளில் உயிரிழந்த 1,000 பேரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் வகையில், 5 பேருக்கு பணியானைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT