Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

தமிழகம் முழுவதும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் - காலி மனைகளின் மதிப்பு 75% வரை குறைப்பு : தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுசிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள காலி மனைகளுக்கான மனைமதிப்பு 5 முதல் 75 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை நாட்டில் முதன்மை மாநிலம் ஆக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு, நடுத்தரதொழில் துறைகளை ஊக்குவிக்கசிறப்பு முயற்சி எடுக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்தஅரசு பொறுப்பேற்றதும், தமிழ்நாடுகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள்கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்கவேண்டும் என்பதை நிறைவேற்றவும், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்க நிலையில் இருந்து தொழில் முனைவோர் மீள வழிவகை செய்யும் வகையிலும், தற்போது தொழில் மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிட்கோ வரலாற்றில் முதல்முறை

இதன்படி, 50 ஆண்டுகள் கடந்து சேவை வழங்கி வரும் சிட்கோ வரலாற்றில் முதல்முறையாக, தொழில் மனைகளின் அதிக விலைகாரணமாக பல ஆண்டுகளாக ஒதுக்கப்படாமல் இருந்த காலிமனைகளை கொண்ட தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் முனைவோர் எளிதில் வாங்கும் அளவில் பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு குறைந்துள்ளது. உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஒரு ஏக்கர் ரூ.1.20 கோடியில் இருந்து 75 சதவீதம் குறைத்துரூ.30.81 லட்சமாகவும், கும்பகோணத்தில் ரூ.3.05 கோடியில் இருந்து 73 சதவீதம் குறைத்து ரூ.81.89 லட்சமாகவும், நாகப்பட்டினத்தில் ரூ.2.39 கோடியில் இருந்து65 சதவீதம் குறைத்து ரூ.85.35 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய மனை மதிப்பில் இருந்து ஏக்கருக்கு கோவை மாவட்டம் குறிச்சியில் ரூ.9 கோடி என்பது ரூ.4.2 கோடியாகவும், திருப்பத்தூர் - விண்ணமங்கலத்தில் ரூ.4.8 கோடியில் இருந்து ரூ.2 கோடியாகவும், செங்கல்பட்டு - ஆலத்தூரில் ரூ.6 கோடியில் இருந்து ரூ.3.5 கோடியாகவும், ஈரோடு தொழிற்பேட்டையில் ரூ.6.4கோடியில் இருந்து ரூ.3.8 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதிக விலை மதிப்பால் பலஆண்டுகளாக குறைவான மனைகளே ஒதுக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி மனைகளை கொண்டகாரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு 30 முதல் 54 சதவீதம் வரையும், விருதுநகர், அரக்கோணம்,பர்கூர் தொழிற்பேட்டைகளின் மதிப்பு 40 முதல் 50 சதவீதம் வரையும் குறைக்கப்பட்டுள்ளது. 19தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

தவிர, 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-17 ஆண்டில் இருந்த மனை மதிப்பே இந்த ஆண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பத்தூர், திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு நடப்பில் உள்ளபடி ஒரு ஏக்கர் ரூ.43.86 கோடி, ரூ.13.41 கோடி என்பதற்கு பதிலாக, ரூ.25.07 கோடி, ரூ.7.66 கோடி என்ற மதிப்பே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறு, சிறு, நடுத்தரதொழில் முனைவோர் குறைந்தவிலையில் மனை ஒதுக்கீடு பெற்று,தொழில் தொடங்கி பயனடையலாம். தொழிற்பேட்டை உருவாக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x