Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினாகடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டுநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்தும்,மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில், அதிமுக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ‘பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து, எதிரிகள் வெற்றி பெற முடியாது, வெற்றி பெற விடமாட்டோம், கழகத்தை அழித்திடலாம் என பகல்கனவு காண்போரின் சதி வலையைஅறுத்தெறிவோம்’ என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர்.
இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா, கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ‘ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம்’ என்று உறுதிமொழி ஏற்றனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினருடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.‘தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காத்திட, எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், ஒருசிலரின் சுயநலத்தால் தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்டது. நம் தலைவர்களின் லட்சியங்களை அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம்’ என அவர்கள் உறுதியேற்றனர்.
தள்ளுமுள்ளு...
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுகவினர், அமமுகவினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தங்கள்தலைவர்களை வாழ்த்தி கோஷமிட்டனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்துபோகச் செய்தனர்.இதற்கிடையில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அதிமுக நிர்வாகிகள் கார் மீது காலணி வீசப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் திரண்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும், அதிமுக தலைவர்களின் வீடுகளிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மலரால் அலங்கரித்து வைத்து அதிமுக, அமமுக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT