Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட தட்டப்பாறை, மீனூர் கொல்லைமேடு பகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் 3.6 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், கொல்லைமேடு கிராமத்தில் செல்வம் என்பவரது வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், பேரணாம்பட்டு வட்டத்துக்கு உட்பட்டடி.டி.மோட்டூர், கமலாபுரம், சிந்தக்கணவாய், பெரியபள்ளம், கவராப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து இரவு 11 மணி மற்றும் 11.35 மணியளவில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்லாமல் திறந்தவெளியில் உறங்கினர்.
நில நடுக்கம் உணரப்பட்ட கிராமங்களில் வருவாய்த் துறையினர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். 3 முறை லேசான நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்த நிலையில் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர். ஏற்கெனவே கடந்த மாதம் 29-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இந்த லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT