Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

1 முதல் 8-ம் வகுப்பு வரை - புதுச்சேரியில் டிச.6 பள்ளிகள் திறப்பு : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை வரும் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் இருந்து ஏற்கெனவே பகுதி நேரத்தில் இயங்கி வந்த 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் முழு நேரமாக செயல்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக 2 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

கடந்த செப்டம்பரில் இருந்து பள்ளி அளவில் 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை திறக்க முடிவெடுத்தோம். மழை காரணமாக திறக்க முடியவில்லை.

தற்போது, டிசம்பர் 6-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரை நாள் பள்ளிகள் இயங்கும். ஏற்கெனவே திறந்து நடைபெறும் 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி வகுப்புகள் 6-ம் தேதி முதல் முழு நாளாக செயல்படும். அனைத்து பள்ளி வகுப்புகளும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் நடத்தப்படும்.

6-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மதிய உணவு தரப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளி தொடங்கிய பிறகு மதிய உணவு தரப்படும். ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கஉள்ளோம்.

ஒமைக்ரான் உலகளவில் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. அச்சப்பட தேவையில்லை. பெற்றோர் கண்டிப்பாக பள்ளிகளைத் திறக்க கோரினர். ஆன்லைன் வகுப்புகளில் கவனிப்பது சிரமமாக இருந்ததாக வலியுறுத்தினர். அதனால் பள்ளிகளை திறக்கிறோம். பள்ளியில் நேரடி வகுப்புடன் ஆன்லைன் வகுப்பும் தொடரும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x