Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM
கோவை அன்னூர் பகுதியில் உள்ள நீர்வளத்தை குறிவைத்தே 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி நடப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை அன்னூர் அருகே தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் (டிட்கோ) சார்பில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் குன்னிபாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாங்கொம்பு, ஆத்திக்குட்டை, குழியூர் ஆகிய 5 கிராம விவசாயிகளை நேற்று சந்தித்து அண்ணா மலை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடையே பேசினார். கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை ஆகிய கிராமங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார். விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
அன்னூர் தாலூக்காவில் 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் சார்பில் வலுக்கட்டாயமாக முயற்சி எடுத்து வருகின்றனர். இங்குள்ள தண்ணீர் வளத்தை குறிவைத்து தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளை விவசாயம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் வானம் பார்த்த பூமி உள்ள பிற இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இங்கு அமைக்கக் கூடாது. அதையும் மீறி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்தால், போராட்டங்கள் நடத்த பாஜக தயங்காது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக எப்போதும் சொல்லவில்லை. ஆனால், பெட்ரோல் விலையை குறைத்துள்ளார். மத்திய அரசு விலையை குறைத்து, மாநில அரசு விலையை குறைக்காவிட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அவருக்கு தெரியும். தமிழகத்தில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4-ம் குறைப்பதாக தெரிவித்த திமுக அரசு, அதற்கேற்ப விலையைக் குறைக்கவில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு.
விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்றால் வேளாண் சட்டம் இன்றியமையாதது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. விவசாயிகளே இந்த சட்டங்கள் வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT