Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
இதன்படி, கடந்த மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.268 அதிகரித்து ரூ.2,133.50-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ரூ.2,234.50-ஆக நிர்ணயம்
இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து, ரூ.2,234.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,463.50-ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.771 அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.369 அதிகரித்து உள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக, ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரியைக் குறைக்க கோரிக்கை
இதற்கிடையே, வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டருக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவேண்டும் என உணவக உரிமையாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அதே சமயம், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50-க்கு விற்கப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித் திருப்பதால், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் என்று தெரிகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த 27 நாட்களாக அதிகரிக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT