Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் - 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

லடாக்-காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை பனிச்சறுக்கு மூலம் சென்று சாதனைபடைத்த, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலர் டி.ஜெகநாதன் உள்ளிட்டோர்.

சென்னை

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே.ஏகாம்பரத்தின் மனைவி குமாரி,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த படைவீரர் கே.கருப்பசாமியின் மனைவி ஆர்.தமயந்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமாரின் மனைவி ஜி.பாண்டியம்மாள் ஆகியோருக்கு காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

மேலும், லடாக் - காரகோரம் கணவாயில் இருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்தராகண்ட் மாநிலம்) பனிச்சறுக்கில் சென்ற ராணுவ குழுவில் பங்கேற்ற முதல் தமிழக வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜை கவுரவித்து பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலர் டி.ஜெகந்நாதன், சிறப்புச் செயலர் வி.கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x