Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.சி. குடியிருப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், பாதிப்பு குறித்து பொதுமக்களிடமும் விசாரித்து, சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து, முடிச்சூர் வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர், செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகரில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி வாணியன்குளம், இரும்புலியூர் மற்றும் குட்வில் நகர் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு, மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் பி.அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர்கள் ஆர்த்தி, ராகுல் நாத், எம்எல்ஏ-க்கள் எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வப்பெருந்தகை உடனிருந்தனர்.
சென்னையில்...
இதேபோல, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னை குமரன் நகர் பிரதான சாலை, ஹரிதாஸ் பிரதான சாலை, சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவா ரணப் பொருட்களை வழங்கினார்.பின்னர், பேப்பர் மில்ஸ் சாலை, தீட்டி தோட்டம் 4-வது தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமைப் பார்வையிட்டார். குமரன் நகர் தணிகாசலம் கால்வாயில் வெள்ள நீர்வரத்தையும் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT