Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 100 செ.மீ மழை பெய்துள்ளது. தொடரும் கனமழையால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
புதுச்சேரியில் நேற்று காலையில் லேசான மழை இருந்தது. காலை 9 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கனமழை கொட்டியதால் நகரெங்கும் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழையால் சண்டே மார்க்கெட் இயங்கவில்லை. தொடர்ந்து மழை கொட்டுவதால் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ ஆகும். இதில் குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள், கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்கள், தென் மேற்கு பருவமழையான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சராசரியாக 40 முதல் 60 செ.மீ., மழை பெய்யும். புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையின் பெரும்பகுதியை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 70 முதல் 80 செ.மீ., மழை பெய்யும்.
ஒவ்வொரு பருவத்திலும் சராசரி அளவை விட கூடுதலாகவே மழை பெய்து வருகிறது.
அதில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 96.1 செ.மீ அளவு மழை பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இருப்பினும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 27 செ.மீ மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஆண்டின் சராசரி மழை அளவை எட்டியிருந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்தில் 104.72 செ.மீ மழை பெய்துள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டில் நேற்று காலை 8.30 மணி வரை மொத்தம் 227.8 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டின் சராசரி அளவை விட 75 சதவீதம் கூடுதலாகும்.
புதுச்சேரியில் ஊசுட்டேரி, பாகூர் ஏரி உட்பட 84 ஏரிகள் உள்ளன. தொடர் கனமழையால் 84 ஏரிகளும் முற்றிலும் நிரம்பிவிட்டன. தற்போதைய தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிராமப் பகுதிகளில் மக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள் கூறுகையில், “அரசு அறிவித்த நிவாரணம் உடனே தர வேண்டும். மழையால் வேலையும் கிடைக்கவில்லை” என்று கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT