Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதன் சாவியை தீபா, தீபக்கிடம் 3 வாரத்தில் ஒப்படைக்க வேண்டு மென உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துகள் அரசு உடமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்ற கடந்த ஆண்டு செப். 16-ல் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து, வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, வேதா நிலை யத்தை அரசு உடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அரசு சார்பில்ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் நடைபெற்றது. ஜெ.தீபக் தரப்பில் வழக்கறிஞர் எல்.எஸ்.சுதர்சனம், ஜெ.தீபா தரப்பில் வழக்கறிஞர் கே.வி.சுந்தர்ராஜன், தமிழக அரசு தரப்பில் அப்போது தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த விஜய் நாராயண், அப்போது அரசு ப்ளீடராக இருந்த வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், கூடுதல் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த எஸ்.ஆர்.ராஜகோபால், சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்த இ.மனோகரன் ஆகியோரும், வருமான வரித் துறை சார்பில் வழக்கறிஞர் டி.ஆர்.செந்தில்குமாரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் உள்ளனர். அவர் மறைவின்போது இறுதிச் சடங்குகளை தீபக்தான் செய்துள்ளார். எனவே, வாரிசுகள்என்ற அடிப்படையில், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் தீபாவும், தீபக்குமே உரிமையாளர்கள். அப்படியிருக்கும்போது, தனிநபரின் சொத்துகளை கையகப்படுத்தி, அதை அரசுடமையாக்கி, நினைவு இல்லமாக மாற்றவோ. அதுதொடர்பாக சட்டம் இயற்றவோ அரசுக்கு அதிகாரம் இல்லை.
ஏற்கெனவே ரூ.80 கோடியில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட் டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை பொதுபயன்பாடாக கருத முடியாது.
அப்பட்டமான விதிமீறல்
ஒரு சொத்தை கையகப்படுத்தும்முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு 60 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
வேதா நிலையத்துக்கு உரிமையாளர்கள் யாரும் இல்லை என்ற கோணத்தில், அரசு தானே அதிகாரத்தை கையில் எடுத்து, செயலாற்றியுள்ளது. தங்களது கட்சித் தலைவரை கவுரவப்படுத்த வேண்டும் என்ற அவர்களது எண்ணம் நன்றாகப் புரிந்தாலும், அரசியல் தலைமை என்பதையும், சொத்தின் உரிமை என்பதையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள மனுதாரர் களிடம் கலந்து ஆலோசிக்காமல், வேதா இல்லத்துக்கு அரசு தன்னிச்சையாக ரூ.67.90 கோடியை இழப்பீட்டுத் தொகையாக நிர்ண யம் செய்து நீதிமன்றத்தில் செலுத்தியதும், தவறான நடைமுறை.
அவசரகதியில் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் வேதா நிலையத்தை அரசு உடமையாக்கி, அதற்கு கடந்த அரசு திறப்பு விழாவும் நடத்தியுள்ளது.
அங்கு மனுதாரர்களின் அத்தையான ஜெயலலிதாவின் உடமைகள் மட்டுமின்றி, மனுதாரர்களின் பாட்டியின் உடமைகளும் உள்ளதாக வாதிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அங்கு சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், வீட்டைப் பூட்டி சாவியை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்த சாவி மாவட்ட ஆட்சியரிம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு உடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு, அரசாணை என அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. இதற்காக பிறப்பிக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரங்களில் வேதா நிலையத்தின் சாவியை தீபா, தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும்.
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை சட்ட ரீதியாக வசூலிக்க வருமான வரித் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வேதா இல்லத்துக்காக அரசு இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.67.90 கோடியை, அரசுக்கே வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா காலகட்டம் என்பதால், தாமதமாக தீர்ப்பளிக்க நேரிட்டதாகவும் நீதிபதி தெரிவித் துள்ளார்.
ஆத்ம திருப்தி அளிக்கிறது: ஜெ.தீபா
இந்த தீர்ப்பு குறித்து ஜெ. தீபா கூறும்போது, "நீண்ட சட்டப் போராட்டத்துக்கு நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறது. அத்தையின் வழியில் ஏழைகளுக்கு நிறைய உதவிகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இப்போதுள்ள தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என நாங்கள் நம்புகிறோம். அதிமுக மேல்முறையீடு செய்தால், அதையும் சட்ட ரீதியாக எதிர்த்து வெற்றிபெறுவோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT