Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(34) என்பவர் வேலூர் ஆவினில் தினக்கூலி பணியாளர்களின் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் மூலம் நியமிக்கப்பட்டு வேலை செய்தவர்களுக்கான சம்பள தொகை ரூ.5.23 லட்சம் தர வேண்டியுள்ளது. இதற்கான காசோலையை வழங்க ரூ.5 ஆயிரம் தொகையை லஞ்சமாக வழங்க வேண்டும் என ஜெயச்சந்திரனிடம், ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால்(57) என்பவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் மகேந்திரமாலை வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சத்துவாச்சாரி தென்றல் நகரில் உள்ள மகேந்திரமால் வீட்டில் போலீஸார் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.
அப்போது, இரும்பு டிரங்க் பெட்டியில் இருந்த சிறிய பையில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கியுடன் 6 தோட்டாக்கள் மற்றும் 0.32 மி.மீ ரக கைத்துப்பாக்கி குண்டுகள் 2-ஐ பறிமுதல் செய்தனர். நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக மகேந்திரமாலிடம் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மகேந்திரமால் உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். பால்வளம் படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர், 1989-ல் தமிழக ஆவினில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு லக்னோவில் கல்லூரியில் படித்தபோது இந்த உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கியுள்ளார்.
அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்த துப்பாக்கி, தோட்டாக்களை அவரது அண்ணனிடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். அவரது அண்ணன் உத்தரபிரதேச மாநிலத்தில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றியுள்ளார்.
கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் தன்னிடம் இருந்ததை மறந்துவிட்டதாகவும், அதை எங்கும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்தது சட்டப்படி குற்றமாகும். எனவே, நாங்கள் பறிமுதல் செய்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இன்று (நவ.10) ஒப்படைக்கப்பட்டன.
இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் புதிய வழக்குப்பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படுவார்’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT