Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை - ஒகேனக்கலில் 25 ஆயிரம் கனஅடி நீர்வரத்து : குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 25 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து, செம்மண் நிறத்தில் அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.

தருமபுரி/சேலம்/கள்ளக்குறிச்சி

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

மாலையில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனிடையே இரவு பெய்த கனமழையால், நேற்று காலை நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. மாலையில் விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதான அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மலைப் பகுதிகளில் இருந்துதண்ணீர் வரத்து இருந்ததால், செம்மண் நிறத்தில்த ண்ணீர்ஓடுகிறது. மேலும், தமிழக - கர்நாடகமாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளியையொட்டி தொடர் விடுமுறையால் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் பயணம் செய்து காவிரி அழகை கண்டு மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,772 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 15,740 கனஅடியாக அதிகரித்தது.

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால், அணையில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வரத்தைவிட நீர்திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 113.59 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 114.46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 84.91 டிஎம்சி-யாக உள்ளது.

20 கிராமங்கள் துண்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தொரடிப்பட்டு தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, கிணத்தர், விளாம்பட்டி, புதூர் எழுத்தூர், எட்டரைபட்டி, கருநெல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் காட்டாற்று வெள்ளத்தில் கடந்து சென்று வருகின்றனர்.

இதேபோல் கல்வராயன் மலையில் உள்ள அடிப்பட்டு பகுதியில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று பெய்த கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பகுதி மக்கள் கயிறு மூலமாகவும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தும் கழுத்தளவு நீரில் இறங்கி ஆற்றை கடந்து செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x