Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

எளிமையின் சின்னமாக வாழ்ந்த - மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார் :

மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.நன்மாறன் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரில் வசித்து வந்த நன்மாறனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், குணசேகரன், ராஜசேகரன் ஆகிய மகன்களும் உள்ளனர்.

நன்மாறனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கு இன்று (அக்.29) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

நன்மாறன் 1947 மே 13-ல் மதுரையில் வே.நடராஜன் - குஞ்சரத்தம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப் படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்றார்.

நன்மாறனின் தந்தை பஞ்சாலை தொழிலாளி, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தந்தையை பின்பற்றி மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்த நன்மாறன், தனியார் பேருந்து நடத்துநர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர கட்சி ஊழியராக பணியாற்றினார். 1971 முதல் கட்சி மேடைகளில் பேச ஆரம்பித்தார்.

இலக்கியப் பணி

எழுத்தார்வம் கொண்ட நன்மாறன், ‘சின்ன பாப்பாவுக்கு செல்லப் பாட்டு’ என்ற சிறுவர்களுக்கான பாடல் நூலையும், காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதிஉள்ளார். எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசும் திறனை பெற்றதால் மேடைக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். பல இடங்களில் பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார்.

2 முறை எம்எல்ஏ

2001, 2006 என 2 முறை மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏவாக இருந்தபோதும் மிகவும் எளிமையாக 2 சக்கர வாகனம், நகரப் பேருந்தில் சென்று வந்தார். கடைசி வரை வாடகை வீட்டில் வசித்தவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்றவர். மக்கள் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x