Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
‘தமிழகத்தில் மழைக்காலம் தீவிரம்அடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டுஇதுவரை 3,187 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போதுமருத்துவமனைகளில் 351 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனாதொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுஉள்ளதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதனால், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைதொடர்கிறது. தற்போது கரோனாகுறைந்த நிலையில், பருவமழையால் டெங்கு பாதிப்பு சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மாதத்தில் மட்டும்இதுவரை மதுரை மாவட்டத்தில் 14 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலேயே முழுகவனத்தையும் செலுத்தி வந்ததால் மழைக்கால நோய் தடுப்புபணிகளில் போதிய தடுப்பு மேற்கொள்ளாமலும், விழிப்புணர்வு செய்யாமலும் விட்டுவிட்டனர்.அதனாலேயே டெங்கு பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரையில் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2012, 2013, 2015, 2017-ம் ஆண்டில் டெங்கு பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. குறிப்பாக, மதுரையில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. அதன்பின் இந்த நோய்கட்டுப்படுத்தப்பட்டது. தற்போதுஇந்த மழை சீசனில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இப்போது வரை 3,187 பேர் டெங்குகாய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 351 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 2012, 2017-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போது பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது.
வீடு, அலுவலகங்களைச் சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். அதனால், டெங்கு பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும். இந்தக் கொசு 500 மீட்டர் அளவில்தான் பறக்கும். அதனை இந்நோயைக் கட்டுப்படுத்துவது எளிது. மக்கள் விழிப்புடன் இருந்தால் டெங்கு பாதிப்பை முழுமையாக தடுத்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT