Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM
திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன், அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது 2 வீடுகளில் சோதனை நடத்தினர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கடந்த 2013-2017 வரை பணியாற்றியவர் அசோகன். இவர் மற்றும் மனைவி ரேணுகாதேவி ஆகியோர் கடந்த 1-4-2012 முதல் 30-4-2016 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 50 ஆயிரத்து 818 அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள அசோகனின் வீடு மற்றும் திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘அசோகன், மனைவி ரேணுகாதேவி ஆகியோர் பெயரில் வேலூர், திருவாரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளதாக புகார் உள்ளது. 2012 – 2016 காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தங்களது வருமானத்தைவிட 63 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது. இதுதொடர்பாக சோதனை நடத்தப்பட்டது” என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT