Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோரிடம் தனிப்படை போலீஸார் 2-ம் நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர். சதீசன், பிஜின் குட்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போதுபல சாட்சிகளிடம் மறு விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8-வது நபரான சந்தோஷ்சாமி, 9-வது நபர் மனோஜ்சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக தனிப்படையினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர், தங்களது வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம், செந்திலுடன் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இவர்களிடம் நேற்று ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி ஆகியோர் இரண்டாம் நாளாக விசாரணை நடத்தினர்.
கொள்ளைக்கு முன்பு..
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9-வது நபரான மனோஜ் சாமி, கேரளாவில் குறி சொல்லும் பூசாரியாக பணி புரிந்து வருகிறார்.
அவரது நண்பர் சந்தோஷ் சாமி. கோடநாட்டில் கொள்ளை நடப்பதற்கு முன் வாளையார் மனோஜ், சயான் ஆகியோர் மனோஜ் சாமியிடம் சென்று குறி பார்த்து பணம் எங்குள்ளது என்று கேட்டு உறுதி செய்தபின் கோடநாடு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் கோடநாடு எஸ்டேட்டுக்குள் செல்லாமல் வெளியே யாராவது வருகிறார்களா என்று காவல் காத்துள்ளனர். அதையே தங்களது வாக்குமூலமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீஸார் அதைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது இருவரிடமும் போலீஸார் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், எஸ்டேட் பங்களாவில் பணம் இருந்ததா? அதை யார் எடுத்து சென்றனர்? வேறு பொருட்கள், ஆவணங்கள் இருந்ததா? வாளையார் மனோஜ், சயான் ஆகியோர் என்ன சொல்லி அழைத்து வந்தனர்? திருடிய பணத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு கிடைத்தது? உட்பட பல்வேறு கேள்விகள் கேட்டு, அதற்கு அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்துக்கொண்டனர்.
இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5-வது நபரான சதீசன் மற்றும் 6-வது நபரான பிஜின்குட்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு வழக்கறிஞர்கள் செந்தில், கே.விஜயனுடன் ஆஜராகினர். அவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், சுரேஷ், ஆய்வாளர் வேலுமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீஸார் கூறும்போது, ‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணையில் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். ஆனால் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருப்பவர்களைப் பொறுத்தவரை முதல் நபரான சயான், ஜம்ஷீர் அலி இருவரிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 8, 9-வது நபர்களான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்று வருகிறோம். குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களிடமும் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர். இன்று குற்றம் சாட்டப்பட்ட 3-வது நபர் தீபு, 10-வது நபர் ஜித்தின் ஜாய் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT