Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM
தேசப்பிதா மகாத்மா காந்தி 1948ஜன.30-ல் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காந்தியின் பெருமைகளைப் போற்றும்வகையிலும், அவர் விட்டுச்சென்ற பணிகளையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க மதுரை உட்பட 7 முக்கிய நகரங்களில் காந்தி அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இதில் மதுரைக்குப் பல்வேறு பெருமைகள் உண்டு.
தென்னிந்தியா முழுமைக்குமாக 1959-ல் மதுரை காந்திஅருங்காட்சியகம், முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. கோட்சே சுட்டபோதுகாந்தியடிகள் அணிந்திருந்த ஆடை இந்த அருங்காட்சியகத்துக்குத்தான் கொண்டு வரப்பட்டது. ரத்தக்கறை படிந்த காந்தியடிகளின் இறுதி உடை ஏன் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதற்கான காரணம் மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
1921 செப். 21-ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த காந்தியடிகள், 251-ஏ, மேலமாசி வீதி என்ற முகவரியில் தங்கியிருந்தார். அப்போது விவசாயிகள் மேலாடை அணிய வசதியின்றி வறுமையில் இருந்ததைக் கண்டு வருந்தினார்.
என்றைக்கு தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை செப்.22-ல் எடுத்தார். இந்நிகழ்வு காந்தியடிகளின் ஆடைப்புரட்சி என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆடைப்புரட்சி நிகழ்வு இன்றுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது. இதனைப் போற்றும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக காந்தியடிகள்- ராஜாஜி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா நேற்று மாலை மதுரை வந்தார்.
இது குறித்து அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தா ராவ்கூறுகையில், `இந்த நூற்றாண்டு விழாவையொட்டி வாழ்த்துச் செய்தி கொண்ட நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிடுகிறோம். 9,10,11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘அரையாடையில் அண்ணல்' என்னும் தலைப்பில் ஓவியம், கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. தேர்வானோருக்கு விழாவில் பரிசுகள் தரப்படும்’ என்றார்.
விழாவில் பிற நகரங்களின் அருங்காட்சியக நிர்வாகிகள், உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உட்பட பலர் பங்கேற்கின்றனர். காலை 9 மணிக்கு காந்தியடிகள் அரையாடையுடன் பொதுக்கூட்டத்தில் பேசிய தற்போதைய காந்தி பொட்டலில் அவரது சிலைக்கு சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதன் பின்பு காந்தி அருங்காட்சியகத்தில் ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
5 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
மதுரையை ஆட்சிபுரிந்த ராணிமங்கம்மாளின் கோடைக் கால அரண்மனையாக இருந்ததுதான் தற்போது காந்தி அருங்காட்சியகக் கட்டிடம். இங்கு காந்தி பயன்படுத்திய 14 அசல், 32 மாதிரிப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காந்தியடிகள் சுடப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்தஅவரது வேஷ்டி மற்றும் அவரது வரலாற்றை அறிந்துகொள்ள ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கருப்பின மக்களின் விடுதலையை தனது வாழ்நாள் மூச்சாகக் கொண்டிருந்த மார்ட்டின் லூதர்கிங், திபெத்திய தலைவர் தலாய்லாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களும் வருகை புரிந்த பெருமை மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT