Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM
புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் நேற்று முன்தினம் இரவு கார் சிக்கியதில் பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள துடையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி சத்யா(32). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். இவர், தனது மாமியார் ஜெயம்(67) என்பவருடன் துடையூருக்கு நேற்று முன்தினம் இரவு காரில் வந்து கொண்டிருந்தார். காரை சத்யா ஓட்டியுள்ளார்.
துடையூர் ரயில்வே சுரங்கப் பாதையில் கார் வந்தபோது, மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு லாரி கடந்து சென்றதால், தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து சத்யா காரை சுரங்கப் பாதையில் ஓட்டியுள்ளார். பாலத்துக்கு அடியில் சென்றபோது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் கார் சிக்கி முன்னும் பின்னும் நகரவில்லை. காருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால், காரில் இருந்த ஜெயம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். ஆனால், சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால் சத்யாவால் காரை விட்டு இறங்க முடியவில்லை.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஜெயத்தையும், காருக்குள் சிக்கி இருந்த சத்யாவையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், சத்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சுரங்கப் பாதையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்தபோலீஸார், கோட்டாட்சியர் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன்படி, குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவல், ரயில்வே, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சுரங்கப் பாதையை நிரந்தரமாக மூடுவது, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை திறந்து தற்காலிகப் பாதையாக பயன்படுத்துவது.
இந்தக் கேட்டை பராமரிக்க பணியாளர் நியமிப்பது, இறந்த சத்யாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெற்றுத் தருவது என முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT