Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM
நீட் தேர்வை சரியாக எழுதாததால் தோல்வி பயத்தில் காட்பாடி அருகே பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுகடந்த 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட்தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(17) என்ற மாணவரும், தேர்வை சரியாக எழுதாததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி(17) என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வுஎழுதிய 17 வயதுள்ள மாணவி ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி திருநாவுக்கரசு. இவருக்கு 4 மகள்கள். இதில், 3 பேருக்கு திருமணமாகிவிட்டது. 4-வது மகள் சவுந்தர்யா(17). வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் சேர சவுந்தர்யா நீட் தேர்வுக்கு தயாரானார். கடந்த 12-ம் தேதி காட்பாடியில் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிய சவுந்தர்யா தனது தாயார் ருக்மணியிடம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை. தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? என கவலையுடன் தெரிவித்து அழுதுள்ளார்.
மாணவிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அவரை தேற்றினர். இருந்தாலும் மாணவி சவுந்தர்யா கடந்த 2 நாட்களாக மனஅழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநாவுக்கரசு தனது மனைவி ருக்மணியுடன் நேற்று காலை வெளியே சென்றார். சவுந்தர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்ற திருநாவுக்கரசு 2 மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் அறையில் சவுந்தர்யா சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT