Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு - இடையூறு ஏற்படுத்தவே ஆளுநராக முன்னாள் உளவு அதிகாரி நியமனம் : கே.எஸ்.அழகிரி விமர்சனம்; மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிருப்தி

அரியலூர்/கோவில்பட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்காகவே முன்னாள் உளவுத் துறை அதிகாரியை ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த வரதராஜன்பேட்டையில் நேற்று முன்தினம் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுபவர் கட்சிப் பிரமுகராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏதாவது ஒரு துறையில் புகழ் பெற்றவராகவோ இருக்க வேண்டும். ஆனால், தற்போது உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரியை தமிழகத்தின் ஆளுநராக நியமித்து இருப்பது நல்ல மரபு அல்ல. தமிழகத்தில் நேர்மையான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன் என்றார்.

மார்க்சிஸ்ட் புகார்

ஆளுநர் மூலம் மத்திய அரசு ஒரு மாநில அரசை ஆட்டிப் படைப்பது பொருத்தமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

எட்டயபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்துக்கு ஆளுநர் என்ற பதவி தேவையா என்ற கேள்வி எழுகிறது. மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, சட்டப்பேரவைநிறைவேற்றுகிற திட்டங்களைத்தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர, ஆளுநரைக் கொண்டு மாநில அரசை ஆட்டிப் படைப்பது பொருத்தமற்றது. இதில் இவரா, அவரா என்ற பாகுபாடு இல்லை. அனைவருமே அப்படித்தான் இருக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக, மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, எட்டயபுரம் நினைவு இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 14 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும் எட்டயபுரம் ஊர் முகப்பில் பாரதியாரின் பெயரில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும். அவருடைய பெயரில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x