Published : 08 Sep 2021 03:16 AM
Last Updated : 08 Sep 2021 03:16 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஐஜி தலைமையில் 3 மணி நேரம் ஆலோசனை :

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஜி, டிஐஜி வாகனங்கள்.

உதகை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 3 மணி நேரம் ஆலோசனை நடந்தது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர்(50) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த வழக்குக்கு அரசு சார்பில் பிரத்யேகமாக ஷாஜகான், கனகராஜ் ஆகிய 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீஸார் மறு விசாரணையை தொடங்கினர். வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே, விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் எனஅரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து கோரி வந்த நிலையில், வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஷாஜி ஆகியோரிடம் போலீஸார் மறுவிசாரணை நடத்தினர். நேற்று சாட்சிகள் யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி ஆகியோர் நேற்று உதகை வந்தனர். இவர்கள் தங்கள் வாகனங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விட்டுவிட்டு, ஆய்வாளர் வாகனத்தில் சீருடை இல்லாமல் பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ஐஜி சுதாகர் தலைமையில் நடந்த கோடநாடு வழக்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் டிஐஜி முத்துசாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, பழைய எஸ்பி அலுவலகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதியம் 1 மணியளவில் தொடங்கியகூட்டம் மாலை 4 மணி வரை நடந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சயான், தனபாலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஷாஜி, ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது மற்றும் நேரடி சாட்சியான கிருஷ்ணதாபாவை நேபாளத்திலிருந்து வரவழைத்து விசாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்றனர்.

இந்நிலையில், சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக அவர்களின் உறவினர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீஸார், சயானின் சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x