Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, நேற்று கோடநாடு எஸ்டேட்டில் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவியிடமும் தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர்(50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி,மனோஜ் சாமி, குட்டி என்கிற பிஜின்ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவ்வழக்கு விசாரணை, 2018-ம் ஆண்டு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், போலீஸார் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் மறு விசாரணையை தொடங்கினர். வழக்கு தொடர்பான சாட்சிகளை விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று முன்தினம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸார் கூறும்போது, ‘‘கோடநாடு வழக்கில் 103 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். 42 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. எனவே, 103 சாட்சிகளில் யாரை, எந்நேரம் வேண்டுமானாலும் விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
கோவையில் விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று கோவை வந்தனர். விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவியிடம் கோவையில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கனகராஜ் உயிரிழந்தது எப்படி, இந்த வழக்கு தொடர்பாக அவர் ஏதாவது கூறியிருந்தாரா?, சம்பவம் நடக்கும் முன்னர் அவரை சந்தித்த நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து விசாரித்தனர். மேலும், கனகராஜின் சகோதரர் விசாரணையில் கூறிய தகவல்கள், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களும் ஒத்துப்போகிறதா எனவும் போலீஸார் ஆய்வு செய்தனர். மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி மேற்பார்வையில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. கோவையில் நடந்த விசாரணையை உறுதிப்படுத்த உயரதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எஸ்டேட்டில் விசாரணை
நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் கோடநாடு எஸ்டேட்டில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். மாலை 3 மணியளவில் எஸ்டேட்டுக்குள் சென்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்துக் கொண்டு, எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கொள்ளை நடத்த பகுதியை ஆய்வு செய்தனர்.மேலும், கொலை, கொள்ளை நடந்தநாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், கொலை நடந்த நுழைவாயில் பகுதியில் விசாரணை செய்தனர். பின்னர் பங்களாவில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், காசாளர் ஆகியோரிடம் விசாரித்தனர்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா கோடநாடு வந்தால், அவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியாளர்கள் யார்? அவர்கள் பங்களாவில் எந்த பகுதியில் பணிபுரிவார்கள் என்பதை கேட்டறிந்தனர். 2 மணிநேர விசாரணைக்குப் பிறகு மாலை 5 மணியளவில் எஸ்டேட்டிலிருந்து தனிப்படையினர் புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT