Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

திமுக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு - படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை

தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக கடந்த 100 நாட்கள் அமைந்துள்ளன. படிப்படியாக அனைத்துவாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள்நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அரசுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. 100 நாட்கள் கடந்ததை நீங்கள் பெருமையுடன் பேசிய நேரத்தில், எனக்கு அடுத்து வரும்காலத்தை பற்றிய நினைப்பே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கோ, எனக்கோ இருந்தஎதிர்பார்ப்பைவிட இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நீங்கள் பாராட்டியது பணியை முடித்துவிட்டதற்காக அல்ல, இன்னும் பணியை செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள்கூட இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க தயாராக உள்ளனர். அந்த அளவுக்கு சிறப்பை, பெயரை பெற்றுள்ளோம். அதை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக உள்ளது.

திமுக ஆட்சிக்கு வரும்போது கரோனா தொற்று நம்மை சூழ்ந்திருந்தது. அதை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட்டோம். ஒரு மாதம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அதையும் தாண்டி மருத்துவமனையில் இடம் இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை என செய்திகள் வந்து மனதை வாட்டியது. இதை எல்லாம் சமாளிக்கத்தான் உடனடியாக வார் ரூம் ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்டு, முடிந்த வரை நிவர்த்தி செய்தோம். மக்களை காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான் இந்த 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று கூறி, உங்களையும் என்னையும் ஏமாற்ற நான் தயாராக இல்லை. படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிறைவேற்றுவோம். அது உறுதி.

அரசின் 100-வது நாளில் தமிழக வரலாற்றில் பதிவாகும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்துடன் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாத பட்ஜெட்டை கொடுத்துள்ளோம். இப்போதுதான் தொடங்கியுள்ளோம். படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். இங்கே படமாக காட்சியளிக்கும் கருணாநிதி இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான்.

தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது. நிதிநிலை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக்கூடிய வகையில் உள்ளது. அதையும் விரைந்து சீர்செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் ஒத்துழைப்புடன்தான் சீர்மிகு தமிழகத்தை உருவாக்குவோம்.

எனது அரசாகத்தான் முதலில் இது உருவானது. இப்போது நான் சொல்கிறேன். எனது அரசு அல்ல; நமது அரசு. இதுதான் என்னுடைய கொள்கை. எமது அரசு; நமது அரசுஎன்று சொல்லக்கூடிய அளவுக்குதான் ஆட்சி நடக்கிறது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரு மடங்காக உழைப்போம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x