Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
திமுக தேர்தல் அறிக்கை, பட்ஜெட்டை ஒப்பிட்டுப் பார்த்தால், வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்திருப்பது தெளிவாக தெரியும்என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘விடியலை நோக்கி’ என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், முதியோர் உதவித் தொகை ரூ.1,500, மாதம் ஒருமுறை மின்கட்டணம் என 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசின் முதல் பட்ஜெட், ‘விரக்தியை நோக்கி’ மக்களை அழைத்து சென்றிருக்கிறது.
திமுக அரசின் திருத்திய பட்ஜெட்டையும், அதன் தேர்தல்அறிக்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தால், வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்திருப்பது தெளிவாகிறது.
மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வழங்குவது தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ள அதே நேரம், ‘ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை’ ‘மீண்டும் உளுத்தம்பருப்பு’ என்பதுபோன்ற வாக்குறுதிகள் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏழை மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு, அகவிலைப்படியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்தது அவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 குறைத்திருப்பது, விலைவாசியை அதிகரிக்கும். டீசல் விலை குறைப்பு பற்றி எதுவும் குறிப்பிடாதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது வேதனையான பட்ஜெட் என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT