Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள், அரசியல், அனைத்து மத தலைவர்கள் இறுதி அஞ்சலி

சுந்தரமூர்த்தி தம்பிரான்

மதுரை

உடல்நலக் குறைவால் முக்தி அடைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக இருந்தவர் அருணகிரிநாதர்(77). இவர்உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு முக்தி அடைந்தார்.

அவரது உடல் மதுரை ஆதீன மடத்தில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணகிரிநாதருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆதீனத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

திருவாவடுதுறை, குன்றக்குடி, தருமபுரி, கோவை காமாட்சிபுரம், கோவை பேரூர், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சைவமடங்களின் ஆதீனங்கள் அஞ்சலிசெலுத்தினர். இதைத் தொடர்ந்துஅருணகிரிநாதர் உடலுக்குப்இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்திமற்றும் சீடர்கள் பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்தனர். அதன்பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, முனிச்சாலையில் உள்ள ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை அடைந்தது. அங்கு அவரது உடல் மாலை4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் மவுன அஞ்சலி

சென்னையில், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மதுரை ஆதீனத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். முதல்வர்ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, தி.க தலைவர் வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x