பட்டுக்கோட்டை அருகே  -  போலி மருத்துவர் கைது :  மருத்துவமனையில் ரூ.1.12 கோடி பறிமுதல்

பட்டுக்கோட்டை அருகே - போலி மருத்துவர் கைது : மருத்துவமனையில் ரூ.1.12 கோடி பறிமுதல்

Published on

பட்டுக்கோட்டை அருகே போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மருத்துவமனையில் இருந்து ரொக்கமாக ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரைச் சேர்ந்தவர் அறிவழகன்(52). இவர், மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கில் மாவட்ட சுகாதாரத் துறை இணைஇயக்குநர் திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அன்பழகன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.

இதில், அறிவழகனின் கல்விச் சான்றிதழ்களை பரிசோதனை செய்தபோது, அவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. மேலும், அவரது மருத்துவமனையில் ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகம், எக்ஸ்-ரே, இசிஜி வசதிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கான 9 படுக்கைகள் இருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, மருத்துவமனை முழுவதும் சோதனை செய்தபோது, 2 டிராவல் பேக், ஒரு அட்டைப் பெட்டியில் ரூ.1.12 கோடி ரொக்கம் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் வருமான வரித் துறை அதிகாரிகள் அங்கு வந்து, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம்புதிதாக இடம் வாங்க வைத்திருந்தது என அறிவழகன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அறிவழகனை மதுக்கூர் போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in