Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை - ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் : கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோ ருக்கு ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை மறைமுகமாக வீடியோ எடுத்து, பணம் பறித்து வந்தது. இது தொடர்பாக பொள்ளாச்சி மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.

சிபிசிஐடி போலீஸார் விசாரித்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலர் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறையில் உள்ள அருளானந்தம், தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது சிபிஐ தரப்பில், "ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நீதிமன்றம் சில விளக்கங்களைக் கோரியுள்ளது. சிபிஐ-யில் போதுமான பணியாளர்கள் இல்லை என்பதால், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விரைவாக முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு பெண் அதிகாரியை நியமித்து உதவவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதையடுத்து நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்க முடியாது என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விசாரணை தொடங்க உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து, 6 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வழக்கில் சிபிஐக்கு உதவும் வகையில், சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமிக்கிறேன்.

சிபிஐ சார்பில் ஆஜர்படுத்தப்படும் சாட்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரி மீது நடவடிக்கை

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயரை ஊடகங்களுக்கு பகிரங்கப் படுத்தியது நீதிமன்றத்தின் கவனத் துக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி தமிழக அரசு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.

ஆனால், இந்த தொகையை தவறு செய்த அதிகாரியிடமிருந்து வசூலிக்கவில்லை. மேலும், அந்த அதிகாரியின் செயல், பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அந்த அதிகாரிக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுத்தால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. அந்த அதிகாரி மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்ற வழக்குகளை விரைவாக விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சரியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்போதுதான், பாதுகாப்பான சூழலில் நாம் இருக்கிறோம் என்ற மனநிலை பொதுமக்களுக்கு வரும். அத்துடன், இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும், மனதில் பய உணர்ச்சி வரும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x