Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனத்தின் - 3 இடங்களில் 2-வது நாளாக சோதனை :

எஸ்.பி.வேலுமணி.

கோவை/ தூத்துக்குடி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி நிறுவனத்தின் 3 இடங்களில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 2016-21 காலகட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். இவர்,தனது பதவிக்காலத்தின் போது, சட்ட விதிகளை மீறி, தனக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு, பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை கொடுத்ததாகவும், இதில் ஊழல்கள் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர்கங்காதரன் அளித்த புகாரின் பேரில், ஊழல் குற்றச்சாட்டின்கீழ் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சந்திரபிரகாஷ், அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரபிரகாஷ், எஸ்.பி.பில்டர்ஸ் உரிமையாளர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் கு.ராஜன் உள்ளிட்டோர் மற்றும் 10 நிறுவனங்கள் மீதும் கூட்டுசதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு, அருகே இடையர்பாளையத்தில் உள்ள எஸ்.பி.அன்பரசனின் வீடு மற்றும் தொடர்புடையவர்களின் இல்லங்கள், நிறுவனங்கள் என கோவையில் 42 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 60இடங்களில் நேற்று முன்தினம் லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஒருநாளுடன் சோதனை நிறைவடைந்தது.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் கோவையில் 2 இடங்கள் மற்றும் திருப்பூரில் ஒரு இடம் என மொத்தம் 3 இடங்களில் கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அவிநாசி சாலை பீளமேட்டில் ரங்க விலாஸ் மில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பன்னடுக்கு வணிக வளாகத்தில் கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. 2 குழுக்களாக வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்துமதுக்கரை அருகே பாலத்துறையில் உள்ள இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு குவாரியிலும், திருப்பூர் பச்சாபாளையம் அருகேயுள்ள ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை வரை நடந்தது.

வேலுமணி விளக்கம்

இதற்கிடையே, நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த எஸ்.பி.வேலுமணி, அங்கிருந்து காலை 7.30 மணிக்கு கார் மூலம் புறப்பட்டுச் சென்றவர், திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த வேலுமணி, செய்தியாளர்களிடம் கூறும்போது, “10-ம் தேதி மதியம் கோயிலுக்கு வருவதாக இருந்தேன். இரவில் இங்கு தங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக வர முடியவில்லை. எனவே, இன்று (11-ம் தேதி) கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தேன். லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து எங்கள் தலைவர்கள் அறிக்கை விட்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அனுமதியைப் பெற்றுபத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமாக தெரிவிப்பேன்” என்றார்.

எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு

கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி.வேலுமணியில் வீட்டில் சோதனை நடந்தபோது வீட்டின் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் திரண்டனர்.

அதிமுகவினர் சட்ட விதிகளை மீறி திரண்டதாக கூறி உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், ஜெயராமன், மகேந்திரன், அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், எம்.எஸ்.எம்.ஆனந்தன், வி.பி.கந்தசாமி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, தடுப்புகளை வைப்பதை தடுத்ததாக காவலர் ரதீஷ் குமார் அளித்த புகாரின்பேரில்10 பேர் மீது குனியமுத்தூர் போலீஸாரும், பாலக்காடு சாலையில் மறியல் செய்த இருவர் மீது திருமலையாம்பாளையம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x