Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

அண்ணா பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் வேல்ராஜ் நியமனம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரிடம் நேற்று வழங்கினார். உடன் ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வீ. பாட்டீல்.

சென்னை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை அந்த குழு கவனித்து வந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் நேற்று நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக ஆளுநரும், அண்ணாபல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். துணைவேந்தராக பொறுப்பேற்கும் நாளில்இருந்து வேல்ராஜ் 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் இருப்பார்.

பேராசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வேல்ராஜ்,தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். உயர்தர இதழ்களில் 193 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ள அவர், சர்வதேச ஆய்வரங்குகளில் 29 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். ரூ.17.85கோடி மதிப்பிலான 15 ஆராய்ச்சிதிட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கம் வரவேற்பு

ஊழல் இல்லாத தமிழரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக பல்கலை.யின் ஆசிரியர் சங்கத் தலைவர் அருள் அறம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x