Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM
வன்னியருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆதிகேசவலு விலகியதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம்இயற்றியது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலர் ஆண்டியப்பன் கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்த பதில்மனுவில், ‘‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை இல்லை எனதெரிவித்ததன் அடிப்படையிலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரம் முன்பாக சட்டம் கொண்டு வந்ததாக கூறுவதை ஏற்கமுடியாது. ஆட்சியின் கடைசி நிமிடம் வரைகொள்கை முடிவு எடுக்கவும், சட்டம் இயற்றவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிற வகுப்பினர் இதன்மூலம் பாதிக்கப்படுவர் என கூறுவதும் கற்பனையே. இந்தவழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதிஆதிகேசவலு தெரிவி்த்தார். இதையடுத்து,வேறு நீதிபதியுடன் வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்த தலைமை நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT