Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM
அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டங்களுக்கு முதல்வர் தலைமைவகிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்குதொடர்ந்தவர், நீதிபதியின் முன்அனுமதியின்றி 5 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்கு தொடரக் கூடாதுஎன தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இந்து மத சேவைகளை செய்ய முடியும் என இந்து சமய அறநிலையத் துறை சட்டவிதிகள் கூறுகின்றன. ஏற்கெனவே, அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் சுவாமி சிலை முன்பு நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கை
கடந்த 2018 ஜூன் மாதம் திருச்சிரங்கம் சென்றபோது, அங்குஉள்ள கோயிலுக்குள் செல்ல அவர் மறுத்துவிட்டார். அங்கு ஸ்டாலினுக்கு ஒரு பட்டாச்சாரியார் சால்வை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டபோது அந்த திலகத்தைஸ்டாலின் உடனே துடைத்துவிட்டார். இது அங்கு இருந்தவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தஇந்துக்களுக்கும் வேதனை அளித்தது. எனவே, அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, 2 சாட்சிகள் முன்னிலையில் இந்து கடவுள் முன்பு உறுதிமொழி எடுக்காமல், ஆலோசனைக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மத உணர்வு
இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு கூறியதாவது:இந்தியா மதச்சார்பற்ற நாடு.முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும்போது கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. தவிர, எந்த மதமும் குறுகியமனப்பான்மையை போதிக்கவில்லை. மனுதாரரின் மத உணர்வுஏற்கத்தக்கது அல்ல. இந்த மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல. இவ்வாறு கூறி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன்அனுமதி பெறாமல் மனுதாரர் 5 ஆண்டுகளுக்கு பொது நலவழக்கு தொடரக் கூடாது என தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT