Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) சென்னையில் நேற்று காலமானார்.
தமிழகத்தில் எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட, மாநில அளவில் பதவிகளை வகித்த அவர், 1999-ல் தமிழககாங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். வயது முதிர்வால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று காலை 7 மணி அளவில் காலமானார்.
அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனையூர் வீட்டில் வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் பனையூர் சென்று திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 1934-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. இவரது மனைவி சரோஜினி தேவி கடந்த 2015-ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு டாக்டர் கண்ணையன் என்ற மகனும், கிருஷ்ணலதா, ஆண்டாள், தேவி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
கடந்த 1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமசாமி படையாச்சியாரால் திண்டிவனம் தொகுதியில் நிறுத்தப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியிலிருந்து எம்எல்ஏ ஆனார். 1978 முதல் 1984 வரை தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
1984-ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், 1991-ல் திண்டிவனம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். திண்டிவனம் நகர்மன்றம், சட்டப்பேரவை, சட்டமேலவை, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என்று 5 அவைகளிலும் உறுப்பினராக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட அவர், தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்றகட்சியைத் தொடங்கி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். 2008-ல் கட்சியை கலைத்துவிட்டு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டார். 2011-ல் அக்கட்சியில் இருந்து விலகியவர், மீண்டும் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.
தி்ண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னையில் இருந்து நேற்று மாலை சொந்த ஊரான திண்டிவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் திண்டிவனத்தில் இன்று தகனம் செய்யப்படும் என்றுமருமகன் ராஜ்மோகன் ‘இந்து தமிழ்திசை' நாளிதழிடம் தெரிவித்தார்.
தலைவர்கள் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுவெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். காமராஜர், இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, கருணாநிதி ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் திண்டிவனம் ராம மூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT